“வைரசுடன் வாழப் பழகுங்கள்.. - சொல்கிறார் பிரதமர்..!
“வைரசுடன் வாழப் பழகுங்கள்.. - சொல்கிறார் பிரதமர்..!

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு அரசு தள்ளிவைத்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,03,434 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 28 நாட்களுக்குள் மரணம் அடைந்த நபர்களின் பதிவாகும்.
இந்நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, ‘முக கவசம் அணிவது தனிநபர் சார்ந்த விருப்பம்’ என அறிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளியே செல்லும்போது விருப்பம் இருந்தால் முக கவசம் அணியலாம் என்ற அறிவிப்புக்கு மருத்துவ நிபுணர்களிடம் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், “தொற்று முடிந்துவிடவில்லை என்பதையும், வரும் வாரங்களில் பாதிப்புகள் தொடர்ந்து உயரும் என்பதையும் நான் வலியுறுத்துகிறேன். இந்த வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் கொரோனா அபாயங்களை கவனமாக நிர்வகித்து, நம் வாழ்க்கையைப நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
இங்கிலாந்தில் வரும் 19ம் தேதியில் இருந்து தளர்வுகளை அளிப்பது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட உள்ள நேரத்தில் இந்த அறிவுறுத்தலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
வரும் 21ம் தேதி முதல் தளர்வுகளை முழுமையாக அறிவிக்க அவர் முன்னதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், டெல்டா மரபணு மாற்ற வைரசால் அங்கு நோய்ப் பரவல் அதிகரிப்பதை அடுத்து அந்த முடிவை அவர் கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

