Theme Check

இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு!!

இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு!!

இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு!!
X

நாடு முழுவதும் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிகிறது. இதைதொடர்ந்து குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராகதிரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநில சட்டமன்ற செயலக வளாகத்திலும், நாடாளுமன்றத்திலும் நடைபெற உள்ளது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் பார்வையாளர் புவனேஷ்குமார் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அக்கட்சி பொதுசெயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

president-election

அதேபோன்று குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் அடையாறில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

வாக்குப்பதிவுக்காக எம்.பிக்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டும், எம்.எல்.ஏக்களுக்கு பிங்க் நிற வாக்குச் சீட்டும் வழங்கப்படும். தலைமைச் செயலகத்தில் உள்ள குழு கூட்ட அறையில், மறைவாக அமைக்கப்பட்டுள்ள மேஜை மீது வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும்.

tn sec

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதில், தமிழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்கலாம் என்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடுத்து செல்லப்படும். வருகிற 21ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it