கொரோனா அதிகரிப்பால் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை.. கூடுதல் கட்டுப்பாடுகள் வருமா?
கொரோனா அதிகரிப்பால் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை.. கூடுதல் கட்டுப்பாடுகள் வருமா?

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல விடுப்பட்டு வந்த நிலையில், புதிதாக ஏற்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தால் நாட்டில் மூன்றாவது அலை உருவாகி உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் தினமும் ஒரு லட்சத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது.
ஒமைக்ரான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கு என அறிவித்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. இந்த நிலையில், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையின் போது மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி விவாதிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் மத்திய அரசு சார்பில் பிரதமர் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கூடுதலாக சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பொறுத்து இது அமையும் என்றும் கூறப்படுகிறது.
newstm.in

