கேரளாவுக்கு பெருமை சேர்த்தவர்! பாகீரதி அம்மாள் 107வது வயதில் காலமானார்!
கேரளாவுக்கு பெருமை சேர்த்தவர்! பாகீரதி அம்மாள் 107வது வயதில் காலமானார்!

கேரளாவில், மிக அதிக வயதில் கல்வி கற்று 4ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த பாகீரதி அம்மாள், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 107.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பரக்குளத்தில் வசித்து வந்தவர் பாகீரதி அம்மாள். இவர் குடும்பச் சூழல் காரணமாக 3ம் வகுப்புடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
திருமணம் ஆகி 6 குழந்தைகளுக்கு தாயான பாகீரதி அம்மாளின் 30வது வயதில் அவருடைய கணவர் உயிரிழந்தார். இதனால், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் பாகீரதி அம்மாள் கவனம் செலுத்தினாலும், தான் படிக்க வேண்டும் என குடும்பத்தாரிடம் அடிக்கடி தனது ஆசையை கூறிவந்தார்.
தனது 6 குழந்தைகளையும் படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து பேரன் பேத்தி, கொள்ளுப் பேரன் வரை கண்ட பாகீரதி அம்மாளுக்கு, கல்வி மீதான நாட்டம் குறையவில்லை. இந்நிலையில், கேரள அரசின் எழுத்தறிவு இயக்கத் திட்டத்தின் கீழ், தனது மகன் உதவியுடன் 4ம் வகுப்புக்கு இணையான கல்வியைப் பெற விண்ணப்பித்து, அதற்கான வகுப்புகளுக்கு சென்று கடந்த ஆண்டு தேர்வு எழுதினார். சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதிய பாகீரதி அம்மாள் மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு 205 மதிப்பெண் பெற்று 4ம் வகுப்பில் தோ்ச்சி பெற்றார்.
குறிப்பாக, கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து பாகீரதி அம்மாள் சாதித்தார். அவர் தேர்ச்சி அடைந்ததைக் கேள்விப்பட்ட கேரள மாநில எழுத்தறிவுப் பணி இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலா நேரில் சென்று அவரை சந்தித்து பாராட்டு தெரிவித்து, ஆசியும் பெற்றார்.
பாகீரதி அம்மாள் குறித்து அறிந்த பிரதமர் மோடி தனது 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் நரி சக்தி புரஸ்கார் விருதும் பாகீரதி அம்மாளுக்கு வழங்கப்பட்டது. பாகீரதி அம்மாளுக்கு 6 பிள்ளைகளும், 12 பேரன்களும், 15 கொள்ளுப் பேரன், பேத்திகளும் உள்ளனர்.

