ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும்... உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் !
ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும்... உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் !

ஆவின் ஊழல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ஆவின் துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இதில் முன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால், கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படைகள் அமைத்துள்ளது.

கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும் இதுவரை ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என தெரியாமல் காவல்துறை தேடி வருகிறது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் மதுரை வீட்டில், உரிய வாரன்ட் இல்லாமல் போலீசார் சோதனை நடத்தியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சரண்டர் ஆக வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், நாளை அல்லது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில், ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கோரிய வழக் கு விசாரணைக்கு வர உள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் வழக்கை சந்திப்பார் என தெரிவித்தார்.
இதையடுத்து, ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் மதுரை வீட்டில், உரிய வாரன்ட் இல்லாமல் ஏன் சோதனை மேற்கொண்டனர் என்பது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதி ஒத்திக்குவைத்தனர்.
newstm.in

