ராமநாதபுரம் மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!!
ராமநாதபுரம் மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!!

மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, கீழத்தூவல் காவல்நிலைய காவலர்கள் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் எனக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, உடலை வாங்கவும் மறுத்துவிட்டனர்.
அதே நேரம் மாணவரை தாக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து, சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது. எனினும் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், ஊர் மக்களும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மறு உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு நடத்தப்பட்டது.
பின்னர் உடலை ஒப்படைக்க காவல்துறையினர் முன் வந்தபோது, ஆய்வு முடிவுகள் வந்தபிறகே பெற்றுக் கொள்வோம் என மீண்டும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கு வந்த உயரதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
newstm.in

