புகார் அளிக்க வந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. இன்ஸ்பெக்டர், ஏட்டு உட்பட 8 பேர் மீது வழக்கு
புகார் அளிக்க வந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. இன்ஸ்பெக்டர், ஏட்டு உட்பட 8 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கரு கலைப்பு செய்த புகாரில் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் சிக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த 32 வயது இளம்பெண் கூறியுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்பாற்ற வேண்டிய போலீசாரை இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளனர். இக்கொடுமை குறித்து, பாதிக்கப்பட்ட பெண் குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, திருமணமாகி விவாகரத்து பெற்ற தன்னை, திருமணம் செய்து கொள்வதாக கூறி அஜிஸ் என்பவர் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக நான் புகார் அளிப்பதற்காக பளுகல் காவல் நிலையத்துக்கு சென்றேன்.

அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரலிங்கம் என்னிடம் விசாரணை நடத்தினார். பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறினார். இந்த பிரச்னை காரணமாக ஏற்கனவே குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு, வாடகை வீட்டுக்காக அலைந்து கொண்டிருந்த நேரத்தில், எஸ்.ஐ. சுந்தரலிங்கம் போனில் தொடர்பு கொண்டு அவரது நண்பர் மூலம், இளஞ்சிறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தந்தார்.
பின்னர் வழக்கு தொடர்பான விசாரணை என கூறி வீட்டுக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், சம்பவத்தன்று என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். இது பற்றி சப் இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கத்திடம் கூறிய போது தனியார் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருவை கலைத்தார்.
இந்த பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. என்னை பலாத்காரம் செய்த எஸ்.ஐ. மற்றும் அவருக்கு துணை நின்று எனது கருவை சட்ட விரோதமாக கலைத்ததுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் மனுவின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன் தினம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று போராட்டம் நடத்தியதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஐ. சுந்தரலிங்கம், பளுகல் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்த கணேஷ்குமார் மற்றும் விஜின் (34), அபிஷேக் (25), உமேஷ் (45), தனியார் கிளினிக் டாக்டர் கார்மல் ராணி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தேவராஜ், அனில்குமார் ஆகிய 8 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 323, 354 (ஏ),376, 313 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் எஸ்.ஐ. ஆக இருந்த சுந்தரலிங்கம், தற்போது பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக தேனி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

