சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடி ராஷ்மிகா ?
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடி ராஷ்மிகா ?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தளபதி 65’ என்று தற்காலிகமாக குறிப்பிடப்பட்டு வருகிறது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில் அவர் அடுத்ததாக விஜய்யுடன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிகில் படத்தில் ராஷ்மிகா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு அவரே ட்விட்டரில் மறுப்பு தெரிவித்தார். மேலும், மாஸ்டர் படத்திலும் அவரை நடிக்கவைக்க படக்குழு முனைப்பு காட்டியது. ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் மாறிப்போனது.
அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்திற்கும் அவருடைய பெயர் அடிபடுகிறது. எனினும், இம்முறை எல்லாம் கூடி வந்தால் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிப்பது உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தோர். இதற்கான அறிவிப்பை விரைவிலேயே தெரியவரும் என்கிறார்கள் அவர்கள்.
கர்நாடாகவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, ஆரம்பத்தில் சில கன்னட படங்களில் நடித்தார். சிறிது ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவருடைய மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்கள் பலருடன் அடுத்தடுத்து நடித்து முன்னணி இடத்திற்கு வந்தார்.
தற்போது அவருடைய கவனம் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. மேலும், ராஷ்மிகாவுக்கு தாய்மொழி கன்னடம் என்றாலும், நன்றாகவே தமிழ் பேச தெரிந்தவர். இதனால் தமிழ் தெரிந்த ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

