வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார் தாஹியா; பிரதமர் மோடி பாராட்டு..!
வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார் தாஹியா; பிரதமர் மோடி பாராட்டு..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, ரஷ்ய வீரர் ஜாவுர் உகுவேவை எதிர்கொண்டார்.
முதல் சுற்று ஆரம்பத்தில் 2க்கு 2 என்ற புள்ளிக்கணகில் சமநிலையில் இரு வீரர்களும் இருந்தனர். அப்போது இந்திய வீரர் சற்றே சறுக்கலை சந்திக்க, ரஷ்ய வீரர் புள்ளிகளை குவித்தார். இறுதியில், ரஷ்ய வீரர் 7க்கு 2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடினார்.
இதனால், ரவிக்குமார் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது. இந்தியாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்துள்ள இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஐந்து பதக்கங்களை பெற்றுள்ளது.
வெள்ளி வென்ற வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரவிக்குமார் தாஹியா ஒரு குறிப்பிடத்தகுந்த மல்யுத்த வீரர்.
விளையாட்டில் அவருடைய போராட்ட குணமும் உறுதித் தன்மையும் தனிச்சிறப்பானது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற அவருக்கு எனது பாராட்டுகள். அவரது சாதனையில் இந்தியா பெருமிதம் கொள்கிறது” என ட்வீட் செய்துள்ளார்.

