சனாதனம் குறித்து ஆளுநர் ரவியோடு விவாதிக்க தயார்.. திருமாவளவன் சவால் !!
சனாதனம் குறித்து ஆளுநர் ரவியோடு விவாதிக்க தயார்.. திருமாவளவன் சவால் !!

மதுரை தெற்குவாசல் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மேயர் இந்திராணி பொன்.வசந்த் மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சமூக நல்லிணக்கம் இக்கால கட்டத்தில் மிக முக்கிய தேவையாக மாறி உள்ளது. மதத்தை வைத்து சமூக நல்லிணத்தை, மக்களை பிரிக்க சிலர் திட்டமிட்டு ஈடுபட்டு வருகின்றனர். இதனை அவர்கள் உணர்ச்சி வயப்பட்டு செய்யவில்லை. நன்றாக சிந்தனை செய்து திட்டமிட்டே அச்செயலை செய்கின்றனர். மக்களை பிரிப்பதை, நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை சீர்தூக்கி பார்த்து அதில் விரும்புவதை அடைய முடியுமா என்பதை என எதிர்பார்த்தே செய்கின்றனர்.

எல்லாவற்றையும் முன்கூட்டியே உணர்ந்து மதிப்பீடு செய்து கணக்கு போட்டு நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சி செய்கின்றனர். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டார்கள் என எண்ணக்கூடாது.
ஆர்எஸ்எஸ் என்பது கற்பிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ஆபத்தான இயக்கம். வெறுப்புணர்வை பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை உள்நோக்கம் கொண்ட இயக்கம். இதையெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டவர்கள் தான் மோடியும் அமித்ஷாவும். ஏற்கனவே இதெல்லாம் திட்டமிடப்பட்டது.
பஜ்ரங்தள், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட 10 அமைப்புகள் ஆர்எஸ்எஸ் இன் கொள்கையை பரப்பும் வேலையை செய்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் 13ஆயிரம் பேர் திருமணம் செய்து கொள்ளாமல் வேலை செய்து கொண்டுள்ளனர். இந்த இயக்கத்திற்கு முழுமையாக தங்களை ஒப்படைத்து வேலை செய்து வருகின்றனர். நாட்டில் நகரத்தில் முக்கியமானவர்களை சந்தித்து மூளைச்சலவை செய்து தங்களுக்கான பணியை செய்து வருகின்றனர்.
வல்லபாய் பட்டேலை உயர்த்துவது அவர்களிள் நோக்கமல்ல. காந்தியை சிறுமைப்படுத்தவே பட்டேலை உயர்த்தி பிடித்தார்கள். பட்டேல் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தவர். அதற்கு எதிராக இருந்தவர். பட்டேல் சமூக வாக்கு வங்கிக்காகவும், காந்தியை ஓரங்கட்ட வேண்டும் என பட்டேலை தூக்கி பிடித்தனர்.

காந்தியடிகளின் இடத்தில் வீர சவார்க்கர் மற்றும் கோட்சேவை போற்ற விரும்புகிறார்கள். வீர சவார்க்கர் என சொல்லும் போதே கூச்சமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டீஸ்க்கு எழுதி விடுதலையானவர். அரசாங்க மதமாக இந்து மதம், நாட்டை பெருபான்மை இந்துக்கள் ஆள வேண்டும் எந்த மதமும் நாட்டில் வலிமை பெற்றுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் நோக்கம்.
ஆப்கானிஸ்தான், மியான்மர், சீனா வரை இந்தியா இருந்தது என பேசுகிறார்கள். அகண்ட பாரதம் அமைப்பதே ஆர்எஸ்எஸ் நோக்கம். இந்த நாடு மன்னர்களால் அல்ல ரிஷிகளால், முனிவர்களின் தவத்தால் உருவாக்கப்பட்ட தேசம் இந்தியா என ஆளுநர் ரவி பேசுகிறார். சனாதனம் தான் பாரதத்தின் ஆன்மா என பேசுகிறார்.
சனாதனம் என்றால் நிலையானது, மாறாதது தொடக்கம் முடிவு இல்லாதது. சனாதனத்தின் உள்ளடக்கம் பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு உண்டு என்பதை சொல்வதே. சனாதன தர்மப்படி பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள். இதனை ஆளுநர் மறுக்க முடியுமா. ஆளுநர் ரவியே வரட்டும் இது குறித்து விவாதிப்போம். அவர் ஆர்.என் ரவியல்ல. ஆர்எஸ்எஸ் ரவி. பார்ப்பனர்களே ஒருவொருக்கொருவர் சமம் இல்லை. இது தான் சனாதன தர்மம்.
ஆர்எஸ்எஸ்-க்கு நேர்த்தியான பயிற்சி கொடுக்கவே அக்னிபத் திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. அக்னிபத் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்தவர்கள் விடுத்து மிச்ச நபர்களை ஆர்எஸ்எஸ் நபர்களாக ஆக்கப்படுவார்கள்.
நாட்டில் அம்பேத்கரை ஏற்ற 30 கோடி தலித் மக்கள் உள்ளனர். எங்கே அம்பேத்கரை ஒதுக்கினால் தலித் மக்களிடம் உள்ள இந்து மதம் சுருங்கிவிடுமோ என அவர்கள் இதை செய்ய தயங்குகின்றன். அம்பேத்கரியம் பெரியாரியம் மார்க்சியம் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என அவர் பேசினார்.
newstm.in

