ரூ2.5 கோடி எல்லாம் கிடையாது! ரூ.25 லட்சம் தான்! அஜித் மனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்!
ரூ2.5 கோடி எல்லாம் கிடையாது! ரூ.25 லட்சம் தான்! அஜித் மனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்!

நடிகர் அஜித், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என பலர் கொரோனா நிவாரண பணிக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் குமார் ரூபாய் 25 லட்சம் அளித்துள்ளார். வங்கிப் பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு நிதி அனுப்பியுள்ளார் நடிகர் அஜித்குமார்.
இதற்கிடையே பத்திரிக்கையாளர்களுக்கு, நடிகர் அஜித் 2.5 ரூபாய் நிவாரண நிதியாக கொடுத்ததாக காலை 8 மணிக்கெல்லாம் தகவல் வந்தது. இது குறித்து எல்லாருமே அஜித், 2.5 கோடி ரூபாய் கொடுத்ததாக செய்தியை வெளியிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், விசாரித்ததில், நடிகர் அஜித், 25 லட்சம் ரூபாய் தான் நிதியாக கொடுத்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. இது குறித்து பலரும், அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் கேட்டதும், அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நடிகர் அஜித் ரூ.25 லட்சம் ரூபாய் நிதியாக கொடுத்தார் என்று பதிவு செய்து தெளிவு படுத்தினார்.
ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நிவாரண தொகையாக ரூபாய் ஒரு கோடி அளித்தனர். மேலும் ஜிஆர்டி குழுமம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி, zoho கார்பொரேஷன் சார்பில் ரூ.5 கோடி, திமுக அறக்கட்டளையின் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி என பலரும் நிவாரண தொகையை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

