சென்னையில் ஒரே நாளில் ரூ.4.83 லட்சம் அபராதம் வசூல்.. மாநகராட்சி அதிரடி !
சென்னையில் ஒரே நாளில் ரூ.4.83 லட்சம் அபராதம் வசூல்.. மாநகராட்சி அதிரடி !

சென்னையில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 2,286 பேரிடம் இருந்து ரூ.4.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்துவந்த கொரோனா அப்படியே மறைந்துவிடும் என மக்கள் கருதினர். இதனால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். எனினும் கடந்த சில நாட்களாக யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தினசரி கொரோனா பாதிப்பு எகிறியது. நேற்று தினசரி பாதிப்பு 5ஆயிரத்தை நெருங்கியது. குறிப்பாக தினசரி பாதிப்பு சென்னையில் தான் அதிகளவில் உள்ளது.

இதனையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குழுக்களில் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். குறிப்பாக சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 2,286 பேரிடம் இருந்து ரூ.4.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் தற்போது வரை ரூ12.54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
newstm.in

