நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி!!
நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி!!

கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அருங்குணம் குச்சிபாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இங்குக் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் 8 பேர் குளிக்கச் சென்றனர்.
அதில் ஏழு பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கிக் குளித்ததாக தெரிகிறது. அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சுமந்தா, பிரியா, நவநீதா ஆகிய மூன்று இளம் பெண்கள், சங்கீதா , மோனிஷா , திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய நான்கு சிறுமிகள் என மொத்தம் 7 பேர் தண்ணீரில் மூழ்கினர்.

இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7 பேரையும் சடலமாக கண்டெடுத்தனர். அவர்களது உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
newstm.in

