ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்கும் சச்சின் ரசிகர்கள்.. இது தான் காரணம் !!
ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்கும் சச்சின் ரசிகர்கள்.. இது தான் காரணம் !!

கடந்த 2015 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேரில் பார்த்தார். அப்போது அந்த மைதானத்தில் விளையாடிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, செய்தியாளர்களிடம் பேசியபோது, டெண்டுல்கர் யார் என்று எனக்கு தெரியாது என்றார்.
இவரது இந்தப் பேச்சு டெண்டுல்கர் ரசிகர்களை ஆத்திரமடையச் செய்ய, சமூக வலைதளங்களில் ஷரபோவாக்கு எதிராக பல்வேறு கருத்துகளை அப்போது ரசிகர்கள் பதிவு செய்தனர். அதற்கு தற்போது அவர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு எழுந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி ரிஹானா ‘நாம் ஏன் இது பற்றி பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க், ஆபாச பட நாயகி மியா கலிஃபா என பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பியிருந்தனர்.

ரிஹானாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்; ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும் என சச்சின் கருத்து தெரிவித்தார்.
இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளுக்கு எதிரான மனநிலையை எடுப்பதா என ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில், சச்சினின் ரசிகர்கள் டென்னிஸ் வீராங்கனை ஷரபோவோவிடம் மன்னிப்பு கோரிவருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சச்சின் குறித்து நீங்கள் கூறியது சரியே என்றும் ரசிகர்களான நாங்கள் தான் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை எனவும் சமூக வலைதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in

