"சச்சின் டெண்டுல்கர் அதற்கு தகுதி இல்லாதவர்" பரபரப்பு புகார் !
"சச்சின் டெண்டுல்கர் அதற்கு தகுதி இல்லாதவர்" பரபரப்பு புகார் !

சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறும் அளவுக்கு தகுதியில்லாதவர் என காங்கிரஸ் மற்றும் நவநிர்மான் கட்சி விமர்ச்சித்துள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த 75 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியா மட்டுமல்லாது உலக முழுவதும் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக, கிரேட்டா தன்பெர்க், ரிஹானா, மீனா ஹாரிஸ், மியா கலீபா உள்ளிட்ட உலக பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இவர்களுக்கு எதிராக, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கும்ளே, ரவி சாஸ்திரி, லதா மங்கேஷ்கர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வெகுண்டெழுந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்களை மத்திய பாஜக அரசு தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிர நவநிர்மான் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளது.

சச்சினின் கருத்து குறித்து,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில், தமக்கு தெரியாத வேறு துறையைப் பற்றி பேசும்போது சச்சின் மிகவும் எச்சரிக்கையாக பேசவேண்டும். போராடும் விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் அவர்களைத் தீவிரவாதிகள் என்று கூறியதை ஏற்கமுடியாது என தெரிவித்தார்.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பீர் கில் கூறுகையில், சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் என்று சந்தேகம் வருகிறது. அந்த விருது பெறும் அளவு அவர் தகுதி பெறவில்லை என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது. ஏதோ ஓன்றை எதிர்பார்த்து அவர் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் என்றும், அவரது மகன் அர்ஜுனை ஐபி.எல். கிரிக்கெட்டில் தேர்வு செய்ய விரும்பினார். அதற்காகவே இப்படி அவர் கூறியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோன்று, மகாராஷ்டிர நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசுகையில், பாரத ரத்னா போன்ற உயரிய விருது பெற்ற லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை கட்டாயப்படுத்தி ரிஹானாவுக்கு எதிராக ட்வீட் போட வைத்துள்ளது. இதுபோல தேசிய அடையாளம் கொண்டோரை தங்கள் விளம்பரத்துக்காக பாஜக தவறாகப் பயன்படுத்தி வருகிறது என குற்றம் சாட்டினார். எனவே, லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பொது மக்களின் கிண்டலுக்கு ஆளானதற்கு மோடி அரசுதான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.

