அதிமுகவைப் பற்றி பேச சசிகலாவுக்கு உரிமை இல்லை..!
அதிமுகவைப் பற்றி பேச சசிகலாவுக்கு உரிமை இல்லை..!

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அதிமுக, எதிர்க்கட்சியாக பொறுப்பேற்றுக் கொண்டது. எதிர்க் கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பு உட்கட்சி பூசலைத் தவிர அதிமுகவுக்கு எத்தகைய சிக்கலும் இருக்கவில்லை.
ஆனால் இப்போது, அதிமுகவில் முக்கிய பங்கு வகித்த சசிகலா, கட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி, அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனினும், நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை.
இந்நிலையில், “அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கும் சசிகலாவின் சூழச்சி ஒரு போதும் பலிக்காது; கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலாவுக்கு அதிமுகவை கைப்பற்றுவது பற்றி பேசுவதற்கான உரிமையில்லை” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

