ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய சீமான் வலியுறுத்தல்!
ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய சீமான் வலியுறுத்தல்!

14 ஆண்டுகள் தண்டனை முடித்த சிறைவாசிகளின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்து அறிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நம்பிக்கையைத் தருவதாகவும், இத்தீர்ப்பு, ஏழு தமிழர்களின் விடுதலைக்கான முன்நகர்வுக்கு உதவிகரமாக இருக்குமெனப் பெரிதும் நம்புவதாகவும் சீமான் கூறியிருக்கிறார்.
14 ஆண்டுகளுக்குக் குறைவான காலம் தண்டனையை அனுபவித்த சிறைவாசிகளின் விடுதலைக்கு 161வது சட்டப்பிரிவின்படி ஆளுநரின் ஒப்புதல் தேவை; அதுவும் மாநில அரசின் ஆலோசனைப்படிதான், ஆளுநர் செயல்பட வேண்டும் எனத் தீர்ப்பில் மாநிலங்களின் சிறைத்துறை உரிமையை வரையறுத்து, தெளிவுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

மரண தண்டனை சிறைவாசிகளை 14 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்காது விடுவிக்கக்கூடாது என வழிகாட்டியிருக்கிறார்கள் நீதிபதிகள். இதன் மூலம், எழுவர் விடுதலைக்கு இடப்பட்ட மாநில அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் கையெழுத்திடாது காலந்தாழ்த்தி, அதனைக் குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல்பாடானது சட்டவிதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதும், விடுதலைக்கு இசைவு தர வேண்டியது ஆளுநரின் கடமை என்பதும் மிகத்தெளிவாகப் புலனாகிறது.

எழுவர் விடுதலை என்பது மாநில அரசால் 161வது சட்டப்பிரிவின் கீழ் கோரப்பட்டுள்ளதாலும், மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்ச நீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்புக் கூறியுள்ளதாலும் தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, விடுதலைக்கு ஒப்புதலைப் பெற்று எழுவரையும் விடுவிக்க வேண்டியதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்க வேண்டியது பேரவசியமாகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

