வெளி மாநில சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்.. சென்னையில் தொடரும் கொடூரம் !!
வெளி மாநில சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்.. சென்னையில் தொடரும் கொடூரம் !!

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியில் பாலியல் தொழில் அதிகளவில் நடப்பதாக அண்மைக்காலமாக புகார்கள் குவிந்து வருகிறது. அதனை போலீசாரும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ஒரு கும்பல் வெளிமாநிலத்தில் இருந்து சிறுமிகளை அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பார்க் டவுன் குழந்தை தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் சந்தேகத்தின்பேரில் பெண்கள், ஆண்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பூக்கடை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அங்கு இருந்த 4 சிறுமிகள், ஒரு பெண்ணையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கிருந்த 2 இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள், சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆய்வாளர் விசாரணை நடத்தியதில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சாலிமா காத்தூன் (41) மற்றும் அன்வீர் உசேன் (38), காஞ்சிபுரம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த அலாம்கீர் உசேன் (22) ஆகியோர் என தெரிந்தது.
இவர்கள் திரிபுராவில் இருந்து சிறுமிகளை கொல்கத்தா மற்றும் பெங்களூரு பகுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பின்னர் கடந்த மாதம் 20ஆம் தேதி கேளம்பாக்கம் படூர் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும், திரிபுரா மாநிலத்தில் சில சிறுமிகளை பியூட்டி பார்லரில் வேலை என்று ஒவ்வொரு வீட்டிற்கும் 13,000 ரூபாய் கொடுத்துவிட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். இங்கிருந்து கேளம்பாக்கம் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் சிறுமிகளை ஈடுபடுத்தி உள்ளனர்.

சிறுமிகளை கெல்லீசில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட சாலிமா காத்தூனை கேளம்பாக்கம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 2 இளைஞர்களை தேடி வருகிறார்கள்.
newstm.in

