அதிர்ச்சி! பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து 2 பேர் பலி!!
அதிர்ச்சி! பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து 2 பேர் பலி!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூரில் கடந்த ஒரு வருடகாலமாக பாதாள சாக்கடை திட்ட பணிக்களுக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் குழி தோண்டும் போது தீடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. அப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் சக்திவேல் (40) கிருஷ்ண மூர்த்தி (50) என்ற இருவர் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

மண் சரிந்து விழுந்ததில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து உடனடியாக அருகிலுருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்புத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்புதுறை வீரர்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் மண்ணில் புதைந்த இருவரையும் சடலமாக மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் போலீசார் மண்ணில் சிக்கி இறந்த சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
newstm.in

