அதிர்ச்சி! சரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை!
அதிர்ச்சி! சரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை!

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கும், ராதிகா சரத்குமாருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகா சரத்குமாரும், ஸ்டீபன் என்பவருடன் பங்குதாரராக சேர்ந்து மேஜிக் ஃபிரேம்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘இது என்ன மாயம்’ என்ற படத்தைத் தயாரித்தனர். இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடம் கடந்த 2014ம் ஆண்டு ஒன்றாரை கோடி ரூபாய் கடனாக வாங்கியிருந்தனர்.
2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த கடனைத் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். அப்படி கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை, அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையை தருவதாகவும் உத்திரவாதம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பு செலவுக்காக பின்னர், கூடுதலாக மேலும் 1 கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகரில் இருக்கும் சொத்துக்களையும் ரேடியன்ஸ் நிறுவனத்திடம் அடமானமாக கொடுத்திருந்தனர். ஆனால் சரத்குமாரும், ராதிகாவும் கொடுத்திருந்த உத்திரவாதத்தை மீறி பின்னர், 'பாம்பு சட்டை' படத்தை இவர்கள் தயாரித்து வெளியிட்டதால் ரேடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் ராதிகா, சரத்குமார் ஆகியோர் அடமானம் வைத்த சொத்துக்களை விற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் பணத்தை திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த ரேடியன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 7 காசோலைகள் திரும்ப வந்ததையடுத்து மூன்று பேருக்கும் எதிராக ரேடியன்ஸ் நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சரத்குமாருக்கும், ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

