அதிர்ச்சி !! சிலிண்டர் விலை கடந்த 7 மாதங்களில் ரூ.240 உயர்ந்துள்ளதா ??
அதிர்ச்சி !! சிலிண்டர் விலை கடந்த 7 மாதங்களில் ரூ.240 உயர்ந்துள்ளதா ??

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக கொண்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் பிற்பகுதியில் சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்படும். சில சமயங்களில் மாதத்தின் இடையிலும் மாற்றியமைக்கப்படும்.
இந்நிலையில், சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் 825 ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர் இன்று முதல் 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வணிக ரீதியான சிலிண்டர் 84 ரூபாய் உயர்ந்து ரூபாய் 1,687க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு 610 ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர் அடுத்தடுத்து மாதங்களில் தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு இன்று 850 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது கடந்த ஏழு மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 240 உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு கடந்த ஜனவரி மாதத்தில் 710 ரூபாயாக விற்பனையானது. கடந்த பிப்ரவரி 4ம்தேதி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.25 விலை அதிகரிக்கப்பட்டு ரூ.735 ஆக இருந்தது. அதன் பின்னர், கடந்த பிப்ரவரி 14ம் தேதி மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாய் ஆக உயர்ந்தது. மீண்டும்3வது முறையாக உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை 810 ரூபாய் ஆக அதிகரித்தது. இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3வது முறையாக சமையல் எரிவாயு சிலண்டர் விலை உயர்ந்துள்ளது.
மார்ச் 1ஆம் தேதியன்று மீண்டும் 25 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 835 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையானது. இதனால் எதிர்கட்சியினர் பல மாநிலங்களில் போராட்டம் நடத்தின. இதனையடுத்து மார்ச் 31ஆம் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 10 ரூபாய் குறைத்து அறிவித்தன.
இதனையடுத்து சிலிண்டர் விலை 825 ரூபாய் ஆக விற்பனையானது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் 25 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை 850 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

