அதிர்ச்சி.. இறந்த குழந்தையின் உடலோடு மழையில் 4 கி.மீ. நடந்த தந்தை..!
அதிர்ச்சி.. இறந்த குழந்தையின் உடலோடு மழையில் 4 கி.மீ. நடந்த தந்தை..!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவருடைய குடியிருப்பு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. அங்கிருந்து நகர பகுதிக்கு போக்குவரத்து வசதி இல்லை.
இந்நிலையில், அவருடைய 4 மாத குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடலை அய்யப்பனிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தடிகூண்டு குடியிருப்பு பகுதி வரை வந்தனர்.
அதன்பிறகு குறுகிய மற்றும் மலைப்பகுதியாக இருப்பதால் அந்த பகுதிக்கு வாகனம் செல்ல முடியாது. அந்த நேரம், பலத்த காற்றுடன் மழையும் பெய்து கொண்டிருந்தது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அய்யப்பன், தன் குழந்தையின் உடலை நெஞ்சோடு அணைத்தபடி நடக்கத் தொடங்கினார்.
உறவினர் ஒருவர் குடைபிடிக்க, கொட்டும் மழையிலும் குழந்தையின் உடலை சுமந்தவாறு 4 கி.மீ. தூரம் நடந்து தன் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, காண்போரின் நெஞ்சை கனக்க வைத்துள்ளது.

