அதிர்ச்சி... 5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை! ஏடிஎம்களில் பணம் வருமா?!
அதிர்ச்சி... 5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை! ஏடிஎம்களில் பணம் வருமா?!

கொரோனா காலத்தில், ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த போது ஏடிஎம்களில் அலைமோதியது கூட்டம். வருகிறதெல்லாம் 500 ரூபாய் தாள்கள் தான். அதுவும் பல ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. ஒவ்வொரு முயற்சிக்கும் வங்கிகள், வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பிடித்தம் வேற செய்கிறார்கள் என்று பொதுமக்கள் புலம்பி தவித்து வந்தனர். இப்போது ஊரடங்கு காலங்கள் எல்லாம் முடிந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா 2வது அலை என்று பயத்தைக் கிளப்புகிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் திருவிழா என்பதால் அடுத்த மாதம் வரை கூட்ட நெரிசல் இப்படி தான் இருக்கும் போது. இந்த வெய்யில் காலத்தில் அரசியல் கட்சியினரின் பிரச்சார எரிச்சல் வேறு.
ஜனவரி மாதத்தில் பண்டிகை நாட்கள் நிறைந்து காணப்படுவதால் அதிக விடுமுறை இருக்கும். ஆனால் அதன் பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விடுமுறை நாட்கள் குறைவாகவே இருக்கும். இதனை அனைவரும் பள்ளி நாட்களிலேயே அறிந்திருப்பர். அதனால் பெரும்பாலானோர் வங்கி வேலை நாட்களை திட்டமிட்டு பணபரிவர்த்தனை செய்வர். அந்த வகையில், இந்த மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதனை விரைவாக முடித்துக் கொள்வது காலச்சிறந்தது என பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

அதாவது, ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். ஆனால் நாளை முதல் அடுத்தடுத்து 5 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 11 ஆம் தேதி மகா சிவராத்திரி காரணமாக சில வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14ஆம் தேதிகள் இரண்டாவது சனி, ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும். மார்ச் 15, 16 தேதிகள் திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை வருகின்றது. ஆனால், மார்ச் 15 மற்றும் 16ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களிலும் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏடிஎம் இயந்திரங்கள் முடங்கிப் போவதற்கான அபாயம் நிறையவே உள்ளன. ஏற்கெனவே பல ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வருவதாக வாடிக்கையாளர்கள் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறையாக இருந்தால், வாடிக்கையாளர்களும் கடும் சிரமம் ஏற்படும் என்று கூறி வருகின்றனர்.
newstm.in

