சென்னையில் அதிர்ச்சி.. மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்த ஐடி ஊழியர்..!
சென்னையில் அதிர்ச்சி.. மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்த ஐடி ஊழியர்..!

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசித்து வந்தவர் பிரகாஷ்(41). ஐடி ஊழியரான அவருக்கு காயத்ரி(39) என்ற மனைவியும் , நித்யஸ்ரீ (13) என்ற மகளும், ஹரிஹரன் (8) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், பிரகாஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர்கள் வீட்டுக்கு இன்று காலை சென்ற பிரகாஷின் தந்தை, வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக, சம்பவ இடத்திலிருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அக்கடிதத்தில், தங்களின் இந்த முடிவு, குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், பிரகாஷ் வீட்டில் சுமார் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடன் பத்திரம் கிடைத்திருப்பதாகவும், அதனால் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொழிச்சலூர் கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த ஐடி ஊழியர் ஆன்லைனில் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி கொலை செய்துள்ளார். அவரது பிள்ளைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை கடிதத்தை வீட்டின் சுவற்றில் ஒட்டி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

