காலையிலேயே அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு!
காலையிலேயே அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு!

வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை போன்று சமையல் எரிவாயு விலையில் ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பதால் எரிவாயு விலை உயர்வதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் அதீத வரிவிதிப்பே விலை உயர காரணம் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்து.
ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மறுபுறம் கேஸ் சிலிண்டர் விலை சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை கேஸ் சிலிண்டர் விலை ஏறிவிட்டது.

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சிலிண்டர் விலை 710 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி 25 ரூபாய் உயர்ந்து 735 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15ம் தேதி மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. ரூ.50 அதிகரித்து 785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. பிப்ரவரியில் மட்டும் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.835க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
newstm.in

