அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. நடிகர் பாண்டு காலமானர் !!
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. நடிகர் பாண்டு காலமானர் !!

பிரபல நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர வைத்திருக்கிறது.

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தப்போதும் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

