அதிர்ச்சி.. நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை..!
அதிர்ச்சி.. நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை..!

கோவை மாவட்டம் அருகே உள்ள கொண்டையம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் கோவை சீரநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்வேதா (18) என்பவர் பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இவருடன் திருச்சியைச் சேர்ந்த பிரியங்கா மற்றும் கரூரைச் சேர்ந்த காவ்யா ஆகியோர் ஒரே அறையில் தங்கி படித்து வருகின்றனர்.
இப்பயிற்சி மையத்தில் மதுரையைச் சேர்ந்த யோகேஸ்வரன் (18) என்பவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.
இவர்கள் பழகி வருவது தெரிந்து ஸ்வேதா மற்றும் யோகேஸ்வரன் இருவரையும் பெற்றோர்கள் பேசக்கூடாது என கண்டித்துள்ளனர்.
இதையடுத்து யோகேஸ்வரனை, கடந்த ஜனவரி மாதம் அந்த பயிற்சி மையத்திற்கு சென்று படிக்க வேண்டாம் என அவரது பெற்றோர் நிறுத்தி சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல் ஸ்வேதா உடல் நிலை சரியில்லாமல் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் அறையில் இருந்துள்ளார். நேற்று மாலை பிரியங்கா, காவ்யா ஆகிய இருவரும் நீட் வகுப்புக்கு சென்றுள்ளனர்.
வகுப்பு முடிந்து பிரியங்கா ஸ்வேதாவிற்கு மெஸ்ஸில் இருந்து உணவு வாங்கி வந்து பார்த்த போது, அறை உள் பக்கமாக பூட்டி இருந்துள்ளது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஸ்வேதா மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வார்டனுக்கு தகவல் தெரிவித்து, கதவை உடைத்து ஸ்வேதாவை மீட்டு குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஸ்வேதா முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த கோவில்பாளையம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரனுக்கு இருந்த பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த ஸ்வேதா தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஸ்வேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெற்றோர் கண்டித்ததால் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

