அதிர்ச்சி தகவல்.. 7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை..!
அதிர்ச்சி தகவல்.. 7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை..!

சென்னை ஐஐடி தொடங்கி நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகி வருவதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.
உயர் கல்வி நிலையங்களில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் தற்கொலை விவரங்களை வழங்குமாறு மக்களவையில் நாமக்கல் தொகுதி எம்பி சின்ராஜ் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், ‘கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஐடி கல்வி நிறுவனங்களில் 34 மாணவர்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர். இதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேரும், பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரும் அடங்குவர் என்று கூறியுள்ளது.
மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம்மில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

