ரூ.300-க்காக கடையின் உரிமையாளர் கொலை.. சகோதரர்கள் கொடூர செயல் !
ரூ.300-க்காக கடையின் உரிமையாளர் கொலை.. சகோதரர்கள் கொடூர செயல் !

300 ரூபாய் பிரச்னைக்காக கடையின் உரிமையாளரை சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டா நகரின் எக்கோடெக் - 1 பகுதியில் நிதின் சர்மா (30), என்பவர் மொபைல் விற்பனை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் தனது கடையில் ரயில், விமானம் டிக்கெட் புக்கிங் பணியையும் செய்து வந்தார். இந்த நிலையில், இவரின் கடைக்கு சில வாரங்களுக்கு முன்பு கர்பாரா பகுதியைச் சேர்ந்த நகுல் சிங் மற்றும் அவரின் சகோதரர் அருண் சிங் ஆகியோர் ஜம்முவுக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கடந்த 5ஆம் தேதி மீண்டும் நிதின் சர்மாவின் கடைக்கு வந்த சகோதரர்கள் தாங்கள் புக் செய்திருந்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர். இதற்காக ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் 300 ரூபாயை கடைக்காரர் நிதின் சர்மா பிடித்தம் செய்துள்ளார். ஆனால் இந்த 300 ரூபாயை திரும்பிவழங்க கோரி சகோதரர்கள், கடைக்காரர் நிதினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் முற்றிய நிலையில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. சகோதரர்கள் இருவரும் கடைக்காரரை தாக்கியுள்ளனர். பின்னரும் ஆத்திரம் தீராத நகுலும், அருணும் தாங்கள் வந்திருந்த மாருதி ஸ்விஃப்ட் காரை எடுத்து கடையில் இருந்த நிதினை மோதியுள்ளனர். இது போல 2, 3 முறை காரை ரிவர்ஸ் எடுத்து நிதினை கடையில் வைத்தே மோதினர்.
பின்னர் காரில் தப்பிச்சென்ற நிலையில், படுகாயமடைந்த கடைக்காரர் நிதின் சர்மாவை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் கடைக்காரர் நிதின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நிதினை கார் ஏற்றி கொலை செய்த சகோதரர்கள் இருவர் மீது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கார்பரா பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த சகோதரர்களில் ஒருவரான நகுலை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு சகோதரரான அருணை போலீசார் தேடி வருகின்றனர். 300 ரூபாய் பிரச்னைக்காக கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in

