இவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யணுமா..?: முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!
இவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யணுமா..?: முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி பொது பட்ஜெட்டும், 19-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று (21-ம் தேதி) முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி உள்ளது.
அதன்படி, இன்றைய விவாதம் நடைபெறுவதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் மற்றும் துறை அமைச்சர்கள் பதில் கூறினர்.
இதன்போது அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் பல்வேறு இடங்களில் தள்ளுபடி செய்யப்படவில்லை. எப்போது வழங்கப்படும்..?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “இன்னும் 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் திரும்ப வழங்கப்படும்” என உறுதி அளித்தார்.
இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக வாக்குறுதியை நம்பியே மக்கள் நகைக்கடன் பெற்றனர்” என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “முறைகேடு செய்தவர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்யச் சொல்கிறீர்களா..?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, “முறைகேடுகள் நடந்ததை ஆதரிக்கவில்லை; ஆனால், திமுக வாக்குறுதியை நம்பியே ஏராளமான மக்கள் நகைக்கடன் பெற்றனர்” என்றார்.
அதன் பின்னர் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல இடங்களில் நகைக்கடன் பெற்று முறைகேடு செய்துள்ளனர். அவைகள் எப்படி தள்ளுபடி செய்யப்படும்..?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.
Next Story

