பக்க விளைவு எச்சரிக்கை- லேசான கொரோனா பாதிப்புக்கு சிடி-ஸ்கேன் கூடாது.. எய்ம்ஸ் இயக்குநா் !
பக்க விளைவு எச்சரிக்கை- லேசான கொரோனா பாதிப்புக்கு சிடி-ஸ்கேன் கூடாது.. எய்ம்ஸ் இயக்குநா் !

லேசான கொரோனா பாதிப்புகளுக்கே சிடி-ஸ்கேன் எடுப்பது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எய்ம்ஸ் இயக்குநா் எச்சரிக்கை விடுத்துள்ளளார்.
எய்ம்ஸ் இயக்குநா் மருத்துவா் ரண்தீப் குலேரியா டெல்லியில் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அப்போது, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிடி-ஸ்கேன் மற்றும் உயிரி குறியீடு (பயோ மாா்கா்) நடைமுறைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. இது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். லேசான கொரோனா பாதிப்பு உடையவா்களுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பது தேவையில்லை.
ஒரு முறை சிடி-ஸ்கேன் எடுப்பது, 300 முதல் 400 முறை இதய எக்ஸ்-ரே எடுத்ததற்கு சமமாகும். இளைய வயதினருக்கு அடிக்கடி சிடி-ஸ்கேன் எடுப்பது, பின்னாளில் அவா்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கதிா்வீச்சுக்கு உங்களை நீங்களே ஆட்படுத்திக் கொள்வது, கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, லேசான கொரோனா பாதிப்புக்கு ஆளானவா்களுக்கு ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும் நிலையில், சிடி-ஸ்கேன் எடுப்பது அவசியமே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அறிகுறிகள் இன்றி லேசான கொரோனா பாதிப்புக்கு ஆளனவா்களுக்கு, சிடி-ஸ்கேனில் தென்படும் பாதிப்புகள் மருத்துவ சிகிச்சை இன்றி தானகவே சரியாகிவிடும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பாதிப்பு உடையவா்கள் மட்டுமே சிடி-ஸ்கேன் எடுக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், அவா்களுக்கு மாா்புப் பகுதி எக்ஸ்-ரே எடுப்பதும் போதுமானதாக இருக்கும்.
அதுபோல, உயா் காய்ச்சல் இல்லாத, ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உயிரி குறியீட்டுக்காக ஏராளமான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டாம்.
மிதமான கரோனா பாதிப்பு உடையவா்களுக்கு மருந்துகள்கூட தேவையில்லை என்று சிகிச்சை நடைமுறை வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்துகின்றன. தேவைப்பட்டால் இவா்மெக்டின் அல்லது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அதையும் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் ரண்தீப் குலேரியா கூறினார்.
newstm.in