அமெரிக்கா வழங்கிய அதிநவீன MH-60 Romeo வகை ஹெலிகாப்டர்.. இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் !!
அமெரிக்கா வழங்கிய அதிநவீன MH-60 Romeo வகை ஹெலிகாப்டர்.. இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் !!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் இந்திய வருகையின் போது 17,500 கோடி ரூபாய் மதிப்பிலான சிகோர்ஸ்கி MH-60 Romeo வகையைச் சேர்ந்த 24 ஹெலிகாப்டர்கள் வாங்க இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இந்த ஹெலிகாப்டர்களை இயக்க, இந்திய கடற்படையைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சான்டியாகோவின் நார்த் ஐலாந்து தீவில் 2 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் மற்றும் கடற்படை அதிகாரி ரண்வீத் சிங் ஆகியோர் ஹெலிகாப்டர்களை பெற்று கொண்டனர்.

சிகோர்ஸ்கி MH-60 Romeo வகை ஹெலிகாப்டர்கள் கடல்வழி பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து வேட்டையாட சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி குண்டு உள்ளிட்ட மேம்பட்ட போர் அமைப்புகளை கொண்டுள்ளது.
எத்தகைய ஆழத்தில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டறியக் கூடிய ரேடார்கள் மற்றும் சென்சார்களை கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு. ஆயுதங்களையும் நீர்மூழ்கி குண்டுகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கவல்ல Hellfire என்றழைக்கப்படும் ஏவணைகளும் MH-60 Romeo ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன.

நொடிக்கு 8.38 மீட்டர் உயரம் பறக்க வல்லது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 267 கிலோ மீட்டர். தொடர்ந்து 834 கிலோ மீட்டர் வரை பறக்கும் வகையிலும் அதிகபட்சமாக 3,438 மீட்டர் உயரம் வரை செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டு காலத்தில் மீதமுள்ள 22 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்து சேரும்.
newstm.in

