Theme Check

எதற்கு மன்னிப்பு? மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் சாவர்க்கர் அல்ல..!!

எதற்கு மன்னிப்பு? மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் சாவர்க்கர் அல்ல..!!

எதற்கு மன்னிப்பு? மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் சாவர்க்கர் அல்ல..!!
X

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மாநிலங்களவை தலைவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோர வேண்டிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவை எதிர்க்கட்சிகளின் சார்பில் மல்லிகார்ஜூன் கார்கேவுடன் 8 உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக சந்தித்து, இடைநீக்கத்தைத் தள்ளுபடி செய்யக் கோரியுள்ளனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, வெங்கய்யா நாயுடு இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மன்னிப்பு கோர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார். ‘எதற்கு மன்னிப்பு? மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் சாவர்க்கர் அல்ல. எங்கள் கலாச்சாரத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதும் வழக்கம் இல்லை’ என கூறியுள்ளார்.

‘நாடாளுமன்ற வழிமுறைகளையும், எதிர்க்கட்சிகளையும் கீழ்த்தரமாக நடத்தும் அரசு இது. எதிர்க்கட்சிகளே நாட்டுக்குத் தேவையில்லை எனக் கருதும் அரசு இது. இவர்களின் முன் நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம்’ எனக் கூறியுள்ள பினாய் விஸ்வம் இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, இடைநீக்கம் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது என வாதிட்டார். ‘முந்தைய கூட்டத்தொடரில் நடந்துகொண்ட விதத்திற்காக இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் மன்னிப்பு கேட்கும் தேவை இங்கு இல்லை’ என அவர் கூறியுள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it