40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை ராணுவம்!
40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை ராணுவம்!

ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. அவ்வப்போது நடைபெறும் சர்வதேச பிரச்சனைகளின் அடிப்படையில் தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது.அந்த வகையில் மறுபடியும் 40 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே இலங்கை-இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். அப்போது 2 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அதில் இருந்த 20 தமிழக மீனவர்களை சிறை பிடித்துள்ளது.
இதை போலவே காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேரையும் , அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இவர்களை இலங்கை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது. தமிழக மீனவர்களை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா மீது அரசியல் கோபம் ஏற்படும் போதெல்லாம் தமிழக மீனவர்களை தாக்குவதும், சிறைப்பிடிப்பதும் இலங்கையின் வாடிக்கையே. இந்தியா தங்களுக்கு சாதகமாக வாக்களிக்கவில்லை என தமிழக மீனவர்களை இலங்கை சிறை பிடித்து இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

