ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய மாணவி படுகாயம்.. ஓட்டுநர், நடத்துனரால் அரங்கேறிய கொடூரம் !!
ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய மாணவி படுகாயம்.. ஓட்டுநர், நடத்துனரால் அரங்கேறிய கொடூரம் !!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்த விக்கிரமராஜா, என்பவரின் மகள் இனியாஸ்ரீ. இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி இனியாஸ்ரீ படிப்பில் சிறந்து விளங்கும் மாணவியாவார். இவர் தினமும் தனியார் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு செல்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். அப்போது மாணவி, இறங்க வேண்டிய அரசு பள்ளி வளாகத்தின் முன்பு பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுனர் தொடர்ந்து ஓட்டியிருக்கிறார். இதுகுறித்து மாணவி பேருந்து நடத்துநரிடம் கேட்கையில், பேருந்து நிறுத்த போதிய நேரம் இல்லை என்று பதிலளித்திருக்கிறார். அதற்கு உரிய விளக்கமளிக்க கேள்வி கேட்ட மாணவியிடம், ‘உனக்கு வேண்டுமானால் ஓடும் பேருந்திலிருந்து இறங்கிக்கோ’என்று பதிலளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆதங்கப்பட்ட மாணவி இனியாஸ்ரீ ஓடும் பேருந்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளார். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மாணவியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவி தேர்வுக்கு தயாராகி சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. இதற்கு ஓட்டுநர், நடத்துனர் தான் முக்கிய காரணம் என்பதால் அவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

