இந்த பகுதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.. சுகாதாரத்துறை செயலர் உத்தரவு..!
இந்த பகுதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.. சுகாதாரத்துறை செயலர் உத்தரவு..!

தமிழகத்தில், கடந்த 40 நாட்களுக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் நேற்று (1ம்- தேதி) திறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அசோக் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டி: “கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்ற கொரோனா சார்ந்த பழக்க வழக்கங்களை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
வீட்டில் யாருக்காவது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மறைக்காமல் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இடவசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொற்று குறைந்து வந்தாலும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றினால் தொற்றை ஒழித்து விடலாம்” என்று அவர் கூறினார்.

