அசத்தல்.. 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் !!
அசத்தல்.. 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் !!

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. தமிழகத்தில் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் சுமார் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒரு கோடியே 48 லட்சம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசி போடவில்லை. 2ஆவது தடவை தடுப்பூசி போட்டு 9 மாதம் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்கள் என சுமார் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது.
இவர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த வசதியாக நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த முகாம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறியதாவது, 2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுகிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் பெயர், விபரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதை வைத்து வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான் இன்று இரவு சேலம் செல்கிறேன். நாளை காலை முதல் மாலை வரை ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட முகாம்களை நேரில் பார்வையிடுகிறேன். இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிக அளவில் வந்து ஊசி போட்டுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.
newstm.in

