நீட் தேர்வில் வெற்றி.. 61 வயது முதியவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா? எதிர்க்கும் மகன் !
நீட் தேர்வில் வெற்றி.. 61 வயது முதியவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா? எதிர்க்கும் மகன் !

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 61 வயது முதியவர் ஒருவர், மருத்துவர் ஆகும் கனவை மகனுக்காக கைவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தருமபுரியைச் சேர்ந்தவர் சிவபிரகாசம். 61 வயதான இவர் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். ஆனால், தான் மருத்துவராக வேண்டும் என தனது மாணவப்பருவ லட்சியம் நிறைவேறவில்லை என மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், நீட் தேர்வு எழுத வயது தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளதால் இதனை பயன்படுத்தி, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றியும் பெற்றார்.

இதனால், சென்னையில் இன்று (ஜனவரி 28) நடைபெறும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததையடுத்து, தருமபுரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார் சிவப்பிரகாசம். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 437 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிவப்பிரகாசத்தின் ரேங்க் 349 ஆகும். இதனால் அவருக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
எனினும், சிவப்பிரகாசம் மருத்துவராவதை அவரது மகன் விரும்பவில்லை. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வரும் சிவப்பிரகாசத்தின் மகன், தனது தந்தையை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்.

அதாவது, சிவப்பிரகாசம் மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவரானால், 10-15 ஆண்டுகள் மட்டுமே மருத்துவராக பணியாற்ற முடியும். ஆனால், இந்த வாய்ப்பு ஒரு இளம் மாணவருக்கு கிடைத்தால், 40 முதல் 40 ஆண்டுகள் வரை மருத்துவராக பணியாற்ற முடியும். மேலும் அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவரின் வாய்ப்பு பறிபோகும் என்றும் சிவப்பிரகாசத்தின் மகன் கூறுகிறார். இதனால் சிவப்பிரகாசம் மருத்துவ கவுன்சிலிங்கில் சேர்வாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
newstm.in

