டிடிவி தினகரன்- ஓபிஎஸ் தம்பி திடீர் சந்திப்பு... அதிமுகவில் புகைச்சல் !!
டிடிவி தினகரன்- ஓபிஎஸ் தம்பி திடீர் சந்திப்பு... அதிமுகவில் புகைச்சல் !!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, மீண்டும் கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே எதிர்பாராதவிதமாக, “அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்று ஓபிஎஸ் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் தொடர் செய்தியாளர் சந்திப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமனாத துளசிக்கும் கடந்த 16-ம் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையடுத்து தஞ்சாவூர் அருகே பூண்டி புஷ்பம் கல்லூரியில் இன்று (அக்.27) திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சசிகலா உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள், அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூண்டியில் இன்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் கலந்துகொண்டனர்.
இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசினார். கடந்த இரு நாட்களாக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா - டிடிவி.தினகரன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது, அரசியல் வட்டாரத்திலும் அதிமுக - அமமுகவினர் இடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.