கதிகலங்கி நிற்கும் மக்கள்.. பிரேசிலில் ஒருநாளில் 3,321 பேர் கொரோனாவுக்குப் பலி !!
கதிகலங்கி நிற்கும் மக்கள்.. பிரேசிலில் ஒருநாளில் 3,321 பேர் கொரோனாவுக்குப் பலி !!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 30.56 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.85 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்துக்கு 400-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகள்படி, பிரேசிலில் புதிதாக 69,381 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 14,050,885 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரேநாளில் தொற்று பாதித்த 3,321 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,78,530ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓரிரு வாரங்களாக பிரேசிலில் கொரோனா பலி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது அந்நாட்டு மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in

