சூப்பர்.. 8 மாதங்களுக்கு பிறகு.. அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி !
சூப்பர்.. 8 மாதங்களுக்கு பிறகு.. அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி !

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் களைகட்டும். குற்றாலத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக அருவில் தண்ணீர் கொட்டும். குளிர்ச்சியான சூழலுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து குளுமையான சீசனை அனுபவிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.

ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், தொற்று பரவல் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. குற்றாலம் அருவிகளில் நாளை (டிச.20) முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி போன்றவற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சமூக இடைவெளியுடன் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியிலும் அண்மையில் தான் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in

