விவசாயிகளுக்கு சூப்பர் தகவல்.. ரூ.15,000 மானியம்..!
விவசாயிகளுக்கு சூப்பர் தகவல்.. ரூ.15,000 மானியம்..!

“மின் மோட்டார் வாங்குவதற்கான மானியம் ரூ.10,000 மற்றும் வயல்வெளியில் நீர் வழி குழாய் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும்” என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்,
ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), கட்டுமானப் பிரிவு பொறியாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களின் ஆய்வுக்கூட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, “முதல்வரின் முகவரி மூலம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், மனுக்களின் மீது உள்ள குறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று, பெறப்பட்ட மனுக்களின் மீது முழுமையான தீர்வு காணப்பட வேண்டும்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி கட்டட பணிகளை விரைந்து முடித்திடவும், கட்டடங்களில் சூரிய ஒளியுடன் கூடிய மின்வசதி மற்றும் பயோ செப்டிக் டேங்க் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், மிகவும் பழுதடைந்த பள்ளி மற்றும் விடுதி கட்டடங்களை கண்டறிந்து உரிய அனுமதி பெற்று இடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன விவசாயி நிலங்களுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் அவர்களின் பங்கு தொகையாக 10 சதவீதம் செலுத்தினால், உடன் தாட்கோ மூலம் மின் இணைப்பு வழங்கப்படும்.
மின் மோட்டார் வாங்குவதற்கான மானியம் ரூ.10,000 மற்றும் வயல்வெளியில் நீர் வழி குழாய் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என்பன போன்ற திட்டங்களை எளிதில் மக்களை சென்றடைந்து பயன் பெற ஏதுவாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களை அணுகி அவர்கள் மூலம் பயனாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

