அமீரகம், ஓமனில் அக்.17 முதல் டி20 உலகக் கோப்பை ! ஐசிசி அறிவிப்பு !!
அமீரகம், ஓமனில் அக்.17 முதல் டி20 உலகக் கோப்பை ! ஐசிசி அறிவிப்பு !!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபா் - நவம்பா் காலகட்டத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி நடத்தப்படவிருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் அழிவை ஏற்படுத்தியதை உலக நாடுகள் உற்றுநோக்கின. இதனால் கொரோனா சூழல் காரணமாக டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும். முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும்.

இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்தியாவின் சார்பாகவே இப்பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. தற்போது இத்தொடரில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

newstm.in

