டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையே கடும் போட்டி !!
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையே கடும் போட்டி !!

7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் அரையிறுதிக்கு செல்வது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
அபுதாபியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- வங்காளதேச அணிகள் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். நைம் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் 36 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள், தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 18.2 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஷம்சி 2 விக்கெட்டுகளையும், ப்ரெடோரியஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் ஹென்றிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. தொடக்கவீரர் ஹென்றிக்ஸ் 4 ரன்னிலும், டி காக் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வான் டெர் டுசன் - கேப்டன் பவுமா ஜோடி நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு எடுத்துச்சென்றனர். இதன்மூலம் 13.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், வங்காளதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் குரூப் 1ல் தென் ஆப்பிரிக்கா அணி 2ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து இருக்கும் நிலையில் தற்போது இரண்டாது இடம் பிடிக்கும் அணிக்கு தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளையும், ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளையும் எடுத்துள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒரு போட்டியும் ஆஸ்திரேலியா அணிக்கு இரண்டு போட்டிகளும் இருப்பதால் யார் அரையிறுத்திக்கு தகுதி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
newstm.in

