தமிழக வீரர்கள் 3 தங்கம்.. இந்தியன் கிராண்ட் பிரிக்சில் போட்டிகளில் அசத்தல் !!
தமிழக வீரர்கள் 3 தங்கம்.. இந்தியன் கிராண்ட் பிரிக்சில் போட்டிகளில் அசத்தல் !!

இந்தியன் கிராண்ட் பிரிக்சில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் அரசு, ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் குமார் ஆகியோர் தங்கப்பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் -2 போட்டித்தொடர் நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்களுக்கான 16 பிரிவுகளில் போட்டி நடந்தன. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளனர்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் தமிழ் அரசு 10.66 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதேபோல், மூன்று பிரிவுகளில் நடந்த 400 மீட்டர் ஓட்டத்தின் ஒட்டுமொத்த முடிவில் தமிழகத்தின் ராஜேஷ் ரமேஷ் (46.09 வினாடி) தங்கம் தட்டிச் சென்றார்.
அதேபோல், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் 50.15 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். மற்ற தமிழக வீரர்கள் பிரவீண் குமார் 4 வது இடம் பெற்றார்.

'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் வெனிஸ்டர் 16.09 மீட்டர் துாரம் தாண்டி, மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் கர்நாடகாவின் பிரியா (52.37), பூவம்மா (52.44), கேரளாவின் ஜிஸ்னா (53.40) முதல் மூன்று இடம் பெற்றனர்.
400 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா (58.55 வினாடி), 0.02 வினாடி நேரத்தில் பின் தங்கி வெள்ளி வென்றார். கேரளாவின் அனு (58.53) தங்கம் கைப்பற்றினார்.
'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழக வீராங்கனை கார்த்திகா 13.08 மீட்டர் தாண்டி, வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார். பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.79 வினாடி சிமி தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக தமிழக அணி 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்கள் கைப்பற்றியது.
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் அசத்திய பஞ்சாப்பின் கமல்பிரீத் கவுர், 61.39 மீட்டர் துரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.
newstm.in

