ஜெர்மனி பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை!
ஜெர்மனி பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை!

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் துறையில் உள்ள 40,000-க்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. இதை வாசிப்பவர்களோ, பராமரிப்பவர்களோ இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
இங்கு மார்ச் மாதம் இந்த தமிழ் துறையின் 'தமிழ் இருக்கை' யின் காலம் முடிவடைய இருக்கும் நிலையில், 2022ல் தமிழ்த் துறையும் மூடப்படவிருக்கிறது.

ஏற்கெனவே ஜெர்மனியின் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த் துறை மூடப்பட்டு விட்டது. அதே போல் ஒரு நிலை கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கும் வராமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக இந்த தமிழ் துறையை அரசு மூட முடிவெடுத்துள்ளது. ஜெர்மனியில் இந்த தமிழ்த் துறை இதுவரையிலும் பல சாதனைகளை செய்துள்ளது. நம் பாரம்பரிய கலைகள், விளையாட்டுகள், ஜல்லிக்கட்டு போன்ற நம் வீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் அனைத்தையும் இதே இடத்தில் தான் ஆவணப்படுத்தியுள்ளனர். தமிழின் பழமை நூலான தொல்காப்பியம், அதற்கு அடுத்தபடியான தமிழ் இலக்கிய நூலான யாப்பருங்கலக் காரிகை, அதையடுத்து சங்கம் மருவிய காலங்களில் வெளியான நாலடியார், நான்மணிக்கடிகை போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், என பலவற்றை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு புதுச்சேரியில் கோடை கால வகுப்புகள், கள ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தமிழ்த் துறை மூடப்படும் பட்சத்தில் இதுவரை செயல்பட்டு வந்த இந்த துறைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துவிடும். இதன் மூலம் வரை 8 பேர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இதுகுறித்து பிராங்க்பர்ட் தமிழ் சங்க செயலாளர் குறிப்பிடும் போது " கொலோன் பல்கலைக்கழகத்திடமும், ஜெர்மனியின் கொலோன் மாநில அரசிடமும் ஏற்கனவே ஜெர்மனியில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் துறையை தொடர்ந்து நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். அது போல, தமிழக அரசிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் பட்சத்தில் தமிழ் இருக்கையை கொலோன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நீட்டிக்கச் செய்ய முடியும்" என்றார். ஒரு வருட கால இடைவெளியில் தமிழக அரசிடமும் இந்திய அரசாங்கத்திடமும் மீண்டும் இந்த பிரச்னையைக் கொண்டுச் சென்று நிரந்தரமாக தமிழ் இருக்கையை செயல்படுத்த வைக்க முடியும்" என்றார்.
இதற்காக, ஐரோப்பாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து "ஐரோப்பிய தமிழர்கள்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி, கூட்டு நிதி மூலம் நன்கொடை திரட்டவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. நன்கொடை வழங்க விரும்புபவர்கள் https://www.betterplace.org/en/projects/90770-save-cologne-tamil-studies என்ற லிங்க் மூலம் பணம் செலுத்தலாம்.
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி'யின் பெருமையை மேற்கத்திய நாடுகளும் உணரும் வகையில் பெரும் நன்கொடை வழங்குவோம். தமிழை வளர்ப்போம்.

