தட்டிக்கேட்ட ஸ்விக்கி ஊழியர்.. தாக்கிய டிராஃபிக் போலீஸ்..!
தட்டிக்கேட்ட ஸ்விக்கி ஊழியர்.. தாக்கிய டிராஃபிக் போலீஸ்..!

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர், சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை தனியார் பள்ளி வாகனம் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும், அதை கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும், இதற்கு ஒரு நீதி வேண்டுமென கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், அவிநாசி சாலை ஃபன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றது.
அந்த வாகனத்தை நான் வழிமறைத்து நிறுத்தி ஓட்டுநரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டுக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், ‘இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம்; நீ யார்..?’ எனக் கேட்டு என்னை தாக்கினார்.
மேலும், ‘அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா..?’ எனக் கேட்டு, பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்து விட்டு, என்னிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து அனுப்பியதாக தெரிவித்தார்.
அந்த பெண் இது குறித்து கேட்டபோது, போக்குவரத்து காவலர், அப்பெண்ணையும் நீங்கள் செல்லும் படி அனுப்பி விட்டதாக தெரிவித்தார்.
தனியார் பள்ளி வாகனம் செய்த தவறை தட்டி கேட்டதற்கு தன் மீது தாக்குதல் நடத்தியது நியாமற்ற செயல் என்றும், இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது அந்த காவலர் ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

