Theme Check

டாஸ்மாக் கடைகள் திறப்பு : கோலமிட்ட பாஜக மகளிர் அணி..!

டாஸ்மாக் கடைகள் திறப்பு : கோலமிட்ட பாஜக மகளிர் அணி..!

டாஸ்மாக் கடைகள் திறப்பு : கோலமிட்ட பாஜக மகளிர் அணி..!
X

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையில், ஊரடங்கில் தளர்வு அளித்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை இன்று (14-ம் தேதி) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு பாஜக, அதிமுக மற்றும் பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன், ‘கொரோனா 2-ம் அலையின் தீவிரம் குறைவதற்கு முன்பாக மதுபானக் கடைகளைத் திறப்பது தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், மதுபானக் கடைகளைத் திறக்கக்கூடாது’ எனத் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மதுபானக் கடைகளைத் திறந்த தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாஜக மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீட்டின் வாசலில் கோலமிட்டுள்ளனர். அதில், ’டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்காதே’ என்ற வாசகத்தை எழுதி, தங்களை எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, “அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைவாக இருந்தபோது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தற்போதைய முதல்வரும், அப்போதைய திமுக தலைவருமான ஸ்டாலின், கருப்புச் சட்டை அணிந்து முழக்கமிட்டார். கொரோனா பாதிப்பு உள்ள காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பது என்பது மக்களின் உயிருடன் விளையாடும் செயல் என முழக்கமிட்டார்.

ஆனால், திமுக ஆட்சியில் கொரோனா தொற்றுப் பரவல் மிகக் கடுமையாக உள்ள நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என திமுகவுடன் இணைந்து முழக்கமிட்ட, அதன் கூட்டணிக் கட்சிகள் மவுனம் காத்து இரட்டை வேடம் போடுகின்றன. மதுபானக் கடைகளைத் திறப்பது என்பது, கொடிய நோயின் தொற்றுப் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும்” என்றனர்.

Tags:
Next Story
Share it