மீண்டும் பதற்றம்.. எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா !
மீண்டும் பதற்றம்.. எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா !

லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம், சீன வீரர்கள் அத்து மீறி நுழைய முயன்றனர். இதை இந்திய வீரர்கள் தடுத்ததால் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய, சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை மீட்டெடுக்க இருதரப்பும் இதுவரை 13 கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. எனினும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை. அவ்வப்போது இரு நாடுகள் தரப்பிலும் படைகளை குவிப்பது, பின்னர் பின்வாங்குவதுமாக இருந்து வருகிறது.

இந்தியா மற்றும் சீன நாடுகளின் எல்லை பகுதியான LAC எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் இந்தியா பீரங்கிகளை குவித்துள்ளது. தவாங் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு உள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அண்மையில் அருணாச்சல் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. சீனாவின் ஆட்சேபத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே, அருணாச்சல பிரதேசத்தின் ருபா பகுதியில், கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், கிழக்கு லடாக் பகுதியைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் சீனப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இது கவலைஅளிக்கிறது. நமது ராணுவத்திடம் சிறந்த கண்காணிப்பு ரேடார்கள்,சிறந்த தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது முக்கிய அம்சமாக உள்ளது. அதை நோக்கி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது எல்ஏசி பகுதியில் இரவு நேரத்திலும் கண்காணிப்புப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆளில்லா கண்காணிப்பு விமானம் பயன்படுத்தப்படும், என அவர் கூறியிருந்தார்.
newstm.in

