பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்- 3 அடுக்கு உயர் பாதுகாப்பு.. டிரோன்கள் பறக்கத் தடை !
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்- 3 அடுக்கு உயர் பாதுகாப்பு.. டிரோன்கள் பறக்கத் தடை !

நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. மத்திய அரசு சார்பில் தலைநகர் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு, ராணுவ தடவாளங்களின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடத்தப்படும். அந்த வகையில் 26ஆம் தேதி டெல்லி ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் குடியரசு தினவிழாவையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து டெல்லி மிக உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக புதுடெல்லி போலீஸ் துணை கமிஷனர் தீபக் யாதவ் கூறியதாவது, டெல்லியில் குடியரசு தினவிழா நடைபெறும் பகுதி முழுவதும் முக அடையாளத்தை காண்பிக்கும் மென்பொருளுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர், உள்ளூர் போலீசார், சிறப்பு பிரிவு போலீசார், தனிப்பிரிவு போலீசார், போக்குவரத்து பிரிவு போலீசார், ஆயுதப்பிரிவு போலீசார் மற்றும் ஸ்வாட் பிரிவு, தேசிய பாதுகாப்புப் படை குழுவினர் மற்றும் டெல்லி காவல் துறையின் அனைத்து பிரிவுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

நிகழ்ச்சியின்போது ட்ரோன்கள் பறக்காமல் இருக்க, இரண்டு இடங்களில் டிரோன் கருவி தடுப்பு ஏற்பாடு அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. உயரமான கட்டிடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். வான் பாதுகாப்பு பீரங்கி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேமரா பொருத்தப்பட்ட வேன்களில் ரோந்து படையினரும் சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி தற்போது 3 அடுக்கு உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாத நாசவேலை தடுப்பு நடவடிக்கைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் ஆளில்லாத விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்ப காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் ஆகியவை நாளை (வியாழன்கிழமை) முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
newstm.in

